அக் 1-ல் எந்திரன் ரிலீஸ்: 3,000 திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திய படம்!
எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க வரும் அக்டோபர் 1ம் தேதி 3,000 திரையரங்குகளில் வெளியாகிறது.
ரூ 150 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எந்திரன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது.
கிட்டத்தட்ட 2,250க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா தெரிவித்தார்.
இதில் தமிழகத்தில் மட்டுமே 1,000 பிரிண்டுகள், 1,450 திரையரங்குகள் என பிரமாண்டமாய் வெளியாகிறது எந்திரன். தமிழில் இனியொரு படம் இந்தமாதிரி வெளிவருமா என்பது சந்தேகமே.
முதல் இந்தியப் படம்:
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, சீனா உட்பட உலகம் முழுவதும் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அமெரிக்காவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் எந்திரன்தான்.
இத்தனை நாடுகளில் இத்தனை மொழிகளில் ஒரே நாளில் திரையிடப்படும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையையும் எந்திரன் பெறுகிறது..."என்று கூறியுள்ளது.
சென்னையில்...
சென்னை நகரில் 32 திரையரங்குகளில் வெளியாகிறது எந்திரன். காசி, பிரார்த்தனா, மாயா ஜால், பிருந்தா போன்றவை சென்னை நகர எல்லைக்கு வெளியில் உள்ள தியேட்டர்களாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் வரையறுத்துள்ளது. எனவே புறநகர் பகுதி திரையரங்குகளின் எண்ணிக்கையுடன் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்திரனுக்கு யு!
இதற்கிடையே எந்திரன் படத்தின் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. செப்டம்பர் 15-ம் தேதியன்று எந்திரன் அனைத்து மொழிகளிலும் சென்சார் செய்யப்பட்டது. படத்தைப் பாராட்டிய சென்சார் அதிகாரி்கள் மற்றும் உறுப்பினர்கள் எந்த கட்டும் ஆட்சேபணையும் இல்லாமல் அனைவரும் பார்க்கத்தக்க படம் என்ற யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment